அஸ்ஸலாமுஅலைக்கும் (வரஹ்) இந்த இணையதளத்திற்கு வருகைதந்தமைக்கு மிக்க நன்றி.

Saturday, November 27, 2010

சில கேள்விகள்-சில பதில்கள்!

o பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
o சகித்து கொள்வது நட்பாகாது என்கிறார்களே. இது சரியா?
o குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம் தானா?
o அழகு என்பது என்ன?
o பணம் முக்கியமா?
o தங்கத்தை ஒரு சொத்தாக மனிதன் ஏன் நினைத்துக்கொண்டு வேதனைப்படுகிறான்?

பெண்ணுக்கு அழுகை ஆயுதமா?
ஆமாம்! ஆண்களுக்கு பெண்கள் என்றால் ஒரு பலஹீனம் ஏற்படும். எந்தப் பெண்ணைக் கண்டால் பலஹீனம் ஏற்படும் என்பதுதான் முக்கியமான விஷயம். கட்டுமஸ்தானப் பெண்ணைக் கண்டால் ஆணுக்கு காமம் கிளறும். அந்தப் பெண் இரை என்று தோன்றும். மகள் என்று தோன்றினால் ஒரு கவலை வரும். அந்தப் பெண்ணை நல்லபடி மணமுடிக்க வேண்டுமே என்ற பொறுப்பு வரும். சகோதரி என்று நினைத்தால் அந்தப் பெண்ணோடு ஒரு போட்டி இருக்கும். அந்தப் பெண்ணோடு சொத்து சம்பந்தமான எண்ணங்கள் ஏற்படும். வேறு உறவினங்கள் ஆணை பெரிதாகத் தாக்கவில்லை. அழுகின்ற பெண் ஆணுக்கு அம்மாவின் சாயலை கொடுக்கிறாள்।
அம்மா என்பவள் தான் ஆணுக்கு உண்மையான பலஹீனம். அழுகின்ற பெண்ணைப் பார்க்கும்பொழுது அம்மா அழுவது போல் இருப்பின் அந்த இடத்தில் ஆண் அடங்கி விடுகிறான். அப்பால் போகிறான். அல்லது அவசரமாக தீர்வுக்கு நெருங்கி வருகிறான். பெண் என்றால் ஆணுக்கு பலஹீனம். அம்மா என்ற பெண் தான் ஆணின் மிகப் பெரிய பலஹீனம்.


சகித்து கொள்வது நட்பாகாது என்கிறார்களே. இது சரியா?
நட்பு வேறன்ன தான் செய்யும்.சகித்து கொள்வதைக் கூட செய்யவில்லை என்றால் அது எப்படி நட்பாகும். மனிதர்கள் என்பவர்கள் குறையும், நிறையும் கொண்டவர்கள். குறையை மெல்ல சுட்டிக்காட்டி களைவதும். நிறையை மிருதுவாக பாராட்டுவதும் தான் நட்பு. குறையை எப்பொழுது சுட்டிக்காட்டி சொல்ல முடியும், திருத்த முடியும். குறையை சகித்துக்கொள்பவருக்குத் தான் திருத்தவும் புத்தி வரும்.
நிறைவில் தள்ளாடுகிறபோது, பாராட்டுகளில் மயங்குகிறபொழுது மெல்ல கீழிறக்கிவிடுவதும் நட்பு. இடுக்கண் களைவதாம் நட்பு என்று திருவள்ளுவர் கூறுகிறார். உண்மையில் இங்கு இடுக்கண், அதாவது துன்பம் எது தெரியுமா? தன்னை அறியாதவன் தன் நிலை பிறழ்வது, தன்னுடைய பேலன்ஸ் அழிந்து தள்ளாடுகிறபோது பிடித்து நிறுத்துவது தான் நட்பு. சகித்து கொண்டவனுக்குத் தான் தள்ளாடுகிறவரை பிடித்து கொள்ளத் தோன்றும். பரஸ்பரம் சகித்து கொள்ள முடியாது என்பவர் வாழவே முடியாதவர்.
வீட்டில் மனைவியை சகித்து கொள்ள முடியாதவர் வெளியே பொது மக்களை, போலீஸ்காரரை, பொறுக்கிகளை நிறைய பல் காட்டி சகித்து கொள்வார்கள். அது சகித்து கொள்வதாக அவருக்கு தெரியவே தெரியாது. எங்கு தன்னுடைய அதிகாரம் செல்லுமோ அங்கு சகித்து கொள்ளாமல் சீறி வருவதுதான் பண்பாக, பழக்கமாக இருக்கிறது.
சகித்து கொள்ள என்ன வேண்டும் தெரியுமா? நண்பரே, தன் மீது பிரியம் வேண்டும். தான் என்ன செய்கிறோம் என்கிற தெளிவு வேண்டும். தன் மீது பிரியம் உள்ளவருக்குத் தான் செய்து கொண்டிருக்கிற விஷயம் தெளிவாக தெரியும். தன் எண்ணங்கள் எத்தகையவை என்று எடை போட்டு உடனே இறக்க முடியும்.
தன்னை ஒவ்வொரு செயலிலும் எடை போட்டு இறக்கி தான் யார் என்று தெளிவாக தெரிகிறவருக்கு மற்றவரை சகித்து கொள்வது விஷயமே அல்ல. சகித்து கொள்ள முடியாது போன பல உயிரினங்கள் மடிந்து போயிருக்கின்றன. சகித்து கொள்ளல் தான் வாழ்க்கையின் அடிப்படை. அந்த சகித்து கொள்ளலுக்கு அடிப்படை அன்பு. அன்பு பற்றி இடையறாது, இடையறாது இந்த உலகம் அலறிக் கொண்டிருக்கிறது. ஆனால் அறிந்தவர் வெகு சிலரே.


பணம் முக்கியமா?
முக்கியம். ஆனால் எதற்கு முக்கியம் என்கிற தெளிவு இருந்து விட்டால் சம்பாதிப்பதும், செலவு செய்வதும் அர்த்தமாகும். வெறுமே அடுக்கி வைத்து பார்க்க ஆசைப்பட்டால் பகைவர்களை உருவாக்கும். நிறைய பணம் உள்ளவர்களிடம் யாரும் உண்மையாய் இருப்பதில்லை. இல்லாதவர்களிடம் மரியாதை செலுத்துவதில்லை. சம்பாதித்து சரியாக செலவழிக்கிறவர்களை உலகம் கொண்டாடத் தவறுவதில்லை.


குழந்தைகளுக்கு பாலியல் கல்வி அவசியம் தானா?
ஒரு குழந்தைக்கு தவளையின் இருதயம் பற்றி தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம்தானா? ஒரு குழந்தைக்கு கீரை தண்டு எப்படி வளர்கிறது என்று தெரிந்து கொள்ளவேண்டியது அவசியம் தானா? ஒரு குழந்தைக்கு கிரகங்கள் எப்படி சுற்றுகின்றன என்று தெரிந்து கொள்வது அவசியம்தானா? ஆமெனில் SEX கல்வியும் அவசியம்.

அழகு என்பது என்ன?
கண்களிலிருந்து வரும் ஒளி தான் அழகு. அறிவும், அன்பும் கலந்தது தான் அழகு. உடையோ, உயரமோ, பருவமோ, பதவியோ அழகல்ல. மனதில் அமைதி இருப்பின் முகத்தில் அழகு சுடர் விடும்.


தங்கத்தை ஒரு சொத்தாக மனிதன் ஏன் நினைத்துக்கொண்டு வேதனைப்படுகிறான்?

ஏதேனும் ஒன்றை சொத்தாக அவன் நினைத்துக் கொள்ள வேண்டும். தங்கம் முக்கியமாக இல்லாத போது, ஆடு, மாடுகள் முக்கியமாக இருந்தன. ஆடு, மாடுகளுக்கு முன்பு நிலங்கள் சொந்தமாக இருந்தன. எது அபூர்வமோ அதை தன் சொந்தமாக நினைப்பது மனித இயல்பு.
நாளையே கடலுக்கு அடியிலிருந்து நாற்பது டன் தங்கம் வெளிவந்து விட்டது என்று வைத்துக் கொள்வோம். தங்கத்தை யாரும் வாங்கமாட்டார்கள். அது செலாவணி ஆகாது. தங்கம் கிடைப்பது குறைவாக இருப்பதால் இந்த அலையல் ஏற்படுகிறது. வைரம் அதிகம் கிடைக்கிறது. ஆனால், கிடைத்த வைரத்தை திரும்ப குப்பையிலேயே கொட்டி விடுகிறார்கள். வைரம் அதிகம் கிடைக்காமல் வியாபாரிகள் பார்த்துக் கொள்கிறார்கள். வைரம் அதிகம் கிடைத்தால் மரியாதை போய்விடும் என்பதற்காக அவர்களே இயற்கை கொடுத்ததை புறந்தள்ளி விடுகிறார்கள்.
எது எளிதில் கிடைக்காததோ அதற்கு பெரிய மரியாதை இருக்கும். கடவுள் என்பதற்கு மரியாதை ஏன் இருக்கிறது? கடவுள் என்பது மாயையான விஷயம். புரியாத விஷயம். புரிந்து போனால் அலட்சியப்படுத்தி விடுவார்கள். புரியாத வரை மிக முக்கியமானதாக, பெரிய வியாபாரமாக நடந்து கொண்டுதான் இருக்கும்.
பதில்கள்: எழுத்தாளர் பாலகுமாரன்
 

தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம்

தொழுகைக்கு என்ன முக்கியத்துவம் கூறப்பட்டிருக்கின்றதோ அதே முக்கியம் நேரத்திற்கும் கூறப்பட்டிருக்கின்றது. சென்ற இதழில் தொழுகையின் வரிசையில் நிற்கும் ஒழுங்குகள் பற்றி தெரிந்து கொண்டோம். இந்த இதழில் தொழுகையின் நேரத்தின் முக்கியத்துவம் பற்றி தெரிந்து கொள்வோம். அல்லாஹ் திருமறையில் இவ்வாறு கூறுகின்றான்.
''நிச்சயமாக தொழுகை முஃமீன்களுக்கு நேரம் குறிப்பிடப்பட்டிருக்கின்றது'' 4.103
மேல் கூறப்பட்ட வசனத்தில் அல்லாஹ்வே தொழுகைக்கு நேரத்தை குறிப்பிட்டதாகக் கூறுகின்றான். ஒரு வேலைக்கு நேரம் குறிப்பிடப்படுவதென்பது அதனுடைய ஆரம்பத்தையும் முடிவையும் காட்டுவதாகும். இவ்வாறே ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்பமும் முடிவும் இருக்கின்றது. ஒவ்வொரு தொழுகையையும் அதன் நேரத்தில் தொழுதுவிட வேண்டும். இஸ்லாம் அனுமதித்த காரணமின்றி ஒரு தொழுகையை அதன் நேரம் தவறி தொழுவது பெரும் குற்றமாகும். அப்படித் தொழுவதை தொழுகையாக கணக்கிடப்படமாட்டாது.
ஓவ்வொரு வணக்கத்திலும் சில தியாகங்களை அல்லாஹ் கடமையாக்கியிருக்கின்றான். தொழுகையிலுள்ள முக்கிய தியாகமே உரிய நேரத்தில் ஒவ்வொரு தொழுகையையும் தொழுவதாகும். ஒரு தொழுகை (சுப்ஹு) தூங்கும் நேரத்திலும், அதனால்தான் சுப்ஹுடைய அதானில் மாத்திரம் தொழுகை தூக்கத்தை விட சிறந்தது என்ற வாசகம் கூறப்படுகின்றது. இன்னுமொரு தொழுகை (லுஹர்) வேலை செய்யும் நேரத்திலும் மற்றொரு தொழுகை (அஸர் மஃரிப்) ஓய்வெடுக்கும் நேரத்திலும் இன்னுமொரு தொழுகை (இஷா) சொந்த வேலைகள் செய்யும் நேரத்திலும் கடமையாக்கப்பட்டிருக்கின்றது.
அடியான் தன் பலதரப்பட்ட தேவைகளுக்குரிய நேரங்களிலும் ஒருசில மணித்துளிகளை அல்லாஹ்விற்காக அற்பணிக்கின்றானா என்பதை, இத்தொழுகையின் நேரங்களின் மூலம் அல்லாஹ் நம்மை சோதிக்கின்றான். ஒரு நாளில் ஐந்து நேரத் தொழுகையை நிறைவேற்றுவது எவ்வாறு கடமையோ அவ்வாறே ஒவ்வொரு தொழுகையையும் அதன் நேரத்தில் நிறைவேற்றுவதும் கடமையே! என்பதை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும். இன்று முஸ்லிம்களில் பலர் பல தொழுகைகளை ஒரு நேரத்தில் தொழுவதை வழக்கமாக்கியிருக்கின்றார்கள். அது முற்றிலும் சரி என்றும் கருதுகின்றார்கள். இது முற்றிலும் தவறாகும். இவர் அத்தொழுகையை தொழுததாக கருதப்படமாட்டாது. அப்படித் தொழுவது கூடுமென்றிருந்தால் தொழுகைக்கு அல்லாஹ் நேரத்தை கடமையாக்கி இருப்பதில் அர்த்தமே இல்லாமல் போய்விடும். ஆகவே இஸ்லாம் நமக்கு வகுத்துத் தந்த தொழுகையின் நேரத்திற்குள் ஒவ்வொரு தொழுகையையும் எப்படியாவது தொழுது விட வேண்டும்.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தொழுகையையும் அதன் ஆரம்ப முடிவு நேரங்களையும், தொழுகை கடமையாக்கப்பட்ட முதல் இரு நாட்களிலும் கற்றுக் கொடுத்துவிட்டுச் சென்ற ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இந்த நேரத்திற்குள்தான் தொழுகையை தொழ வேண்டும் என்று கூறியது இங்கு குறிப்பிடத்தக்கது. எந்த ஒரு தொழுகையையும் அதன் நேரம் வருவதற்கு முன் நம்மில் யாரும் தொழுவதில்லை. காரணம் அத்தொழுகைக்குரிய நேரம் இன்னும் வரவில்லை என்ற ஒரே காரணத்திற்காகத்தான். அவ்வாறுதன் அத் தொழுகையின் நேரம் முடிந்த பின்பும் அதை தொழுவது கூடாது என்பதை யாரும் மறுக்க முடியாது. காரணம் அதற்குரிய நேரம் முடிந்து விட்டது.
உதாரணத்திற்கு லுஹர் தொழுகையின் நேரம் முற்பகல் 12.25 மணிக்கு ஆரம்பித்து பிற்பகல் 3.45 மணிக்கு முடிவடைவதாக வைத்து கொள்ளுங்கள். யாராவது முற்பகல் 12.00 மணிக்கு லுஹர் தொழுகையை தொழுவார்களா? அப்படி தொழுதால் அத்தொழுகை ஏற்றுக்கொள்ளப்படுமா? இல்லை என்றே நாம் அனைவரும் கூறுவோம். காரணம் அதற்குரிய நேரம் இன்னும் ஆரம்பிக்கவில்லை. அவ்வாறுதான் 3.45மணிக்கு பின் லுஹரை தொழுவதும் கூடாது. காரணம் அதற்குரிய நேரம் முடிந்து விட்டது. இதை புத்தியுள்ள அனைவரும் அறிவர். இதைத்தான் இஸ்லாமும் கூறுகின்றது. காலத்திற்கு காலம் தொழுகையின் நேரங்கள் மாறும் என்பதையும் வாசகர்களுக்கு அறியத்தருகின்றோம்.
சில குறிப்பிட்ட காரணங்களுக்காக ஒரு தொழுகையை இன்னொரு தொழுகையின் நேரத்தில் தொழலாம் அவைகள்:
1. பிரயாணம் அதாவது பிரயாணி லுஹர் நேரத்தில் அஸரை முற்படுத்தியும், அல்லது அஸர் நேரத்தில் லுஹரை பிற்படுத்தியும் தொழலாம். அவ்வாறே மஃரிப் நேரத்தில் இஷாவை முற்படுத்தியும் அல்லது இஷா நேரத்தில் மஃரிபை பிற்படுத்தியும் தொழலாம்.
2. தூக்கம் ஆழ்ந்த தூக்கத்தின் காரணமாக ஒரு தொழுகையின் நேரம் முடியும் வரை தூங்கி அத்தொழுகையின் நேரம் முடிந்த பின் எழுந்திருந்தால் அவர் எழுந்ததும் அத் தொழுகையை தொழலாம். அவர் அல்லாஹ்விடத்தில் குற்றம் பிடிக்கப்படமாட்டார். யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
3. மறதி ஒருவர் மறதியின் காரணமாக ஒரு தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை நிறைவேற்றாமல் இன்னுமொரு தொழுகையின் நேரத்தில் ஞாபகம் வந்தால் அவர் அதே நேரத்தில் தொழுது கொண்டால் போதுமானதாகும். அல்லாஹ்விடத்தில் அவர் குற்றம் பிடிக்கப்படமாட்டார்.
யார் தூக்கத்தினாலோ அல்லது மறதியினாலோ (தொழுகையின் நேரம் முடியும் வரை அத்தொழுகையை தொழவில்லையோ) அவர் ஞாபகம் வந்ததும் (அல்லது விழித்ததும்) அதை தொழுது கொள்ளட்டும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
4. அரஃபா மற்றும் முஸ்தலிபாவில் அரஃபாவுடைய நாளில் அஸரை லுஹர் நேரத்தில் தொழுவதும் முஸ்தலிபாவுடைய இரவில் மஃரிபை இஷாவுடைய நேரத்தில் தொழுவதும் இஸ்லாத்தில் அனுமதிக்கப்பட்ட ஒன்றாகும்.
மேல் கூறப்பட்ட காரணமின்றி ஒரு தொழுகையை இன்னொரு தொழுகையின் நேரத்தில் தொழுவது அர்த்தமற்ற ஒன்றாகும். அவர் அல்லாஹ்விடத்தில் குற்றவாளியாவார்.ஆரம்ப நேரம் சிறந்ததுஒரு தொழுகையை அதன் நேரம் முடிவதற்கு முன் தொழுது கொண்டால் போதுமென்றிருந்தாலும் அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதே சிறந்ததாகும்.அமல்களில் சிறந்தது தொழுகையை அதன் ஆரம்ப நேரத்தில் தொழுவதாகும் என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.
தொழுகையின் நேரங்களை அறிந்து கொள்ளும் முறை
இன்று நம் நாள்காட்டிகளில் (காலண்டர்களில்) தொழுகையின் நேரம் குறிப்பிடப்பட்டிருப்பதை அனைவரும் அறிவோம். அதுவே இஸ்லாம் கூறும் தொழுகையின் நேரமாகும். நமது நலன்கருதி அறிஞர்கள் அதை நமக்கு இலகுபடுத்தியிருக்கின்றார்கள்.
இந்த நேர அட்டவணையை ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களே நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு கற்று கொடுத்தார்கள் என்பதை பின்வரும் ஹதீது தெளிவு படுத்துகின்றது.
நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்,
''கஃபதுல்லாவில் இரு முறை எனக்கு ஜிப்ரீல் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தொழுகை நடத்தினார்கள்.
சூரியன் உச்சியிலிருந்து சாய்ந்த போது எனக்கு லுஹரை தொழுவித்தார்கள் அப்போது (நிழல் செருப்பின்) வாரளவு இருந்தது. நிழல் அந்த பொருளின் அளவாக (நீளமாக) இருந்த போது எனக்கு அஸரை தொழுவித்தார்கள். நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் எனக்கு மஃரிபை தொழுவித்தார்கள். செம்மேகம் (சூரியன் மறைந்த போது) மறைந்த போது எனக்கு இஷாவை தொழுவித்தார்கள்.
நோன்பாளிக்கு குடிப்பதும் உண்பதும் தடுக்கப்பட்ட நேரத்தில் எனக்கு ஃபஜ்ரை தொழுவித்தார்கள். (இது முதல் நாள் தொழுவித்த நேரம்)
அடுத்த நாள் ஒரு பொருளின் அளவு அந்த நிழல் வந்த போது எனக்கு லுஹரை தொழுவித்தார்கள்.
ஒரு பொருளின் நிழல் இரு மடங்கு வந்த போது எனக்கு அஸரை தொழுவித்தார்கள்.
நோன்பாளி நோன்பு திறக்கும் நேரத்தில் (சூரியன் மறைந்த போது) எனக்கு மஃரிபை தொழுவித்தார்கள். இரவின் மூன்றில் ஒரு பகுதி வந்தபோது எனக்கு இஷாவை தொழுவித்தார்கள். சூரியனின் மஞ்சள் (நிறம்) வருவதற்கு சற்று முன் எனக்கு ஃபஜ்ரை தொழுவித்தார்கள். பின்பு என் பக்கமாக திரும்பி முஹம்மதே! இது உங்களுக்கு முன் சென்ற நபிமார்களின் (தொழுகையின்) நேரமாகும். (ஆகவே உங்களுக்குரிய தொழுகையின்) நேரமும் இந்த இரண்டு நேரங்களுக்கு மத்தியில் இருக்க வேண்டும் எனக்கூறினார்கள்.'' (அபூதாவூத்)
மேல் கூறப்பட்ட ஹதீதிலிருந்து நமக்கு கிடைக்கும் விளக்கங்கள்:
1. ஒவ்வொரு தொழுகைக்கும் ஆரம்ப நேரத்தையும் முடிவு நேரத்தையும் கற்றுக் கொடுத்தது அல்லாஹ்வே! 2. நமக்கு அறிமுகமில்லாத பகுதிகளுக்கோ நாடுகளுக்கோ நாம் பிரயாணம் செய்தாலும் யாருடைய உதவியுமின்றி தொழுகையின் நேரங்களை மேல் கூறப்பட்ட ஹதீதை வைத்து தெரிந்து கொள்ளலாம்.அலைஹி3. ஒரு தொழுகையின் நேரம் அடுத்த தொழுகைக்குரிய நேரம் ஆரம்பிக்கும் போது முடிவடைந்து விடுகின்றது. ஆனால் சுப்ஹு தொழுகையின் நேரம் அதற்கு அடுத்த தொழுகையாகிய லுஹர் தொழுகையின் நேரம் வரைக்கும் நீடிக்காது. சூரிய உதயத்தோடு அது முடிவடைந்து விடுகின்றது. 4. அஸர் தொழுகைக்கும் இஷாத் தொழுகைக்கும் முடிவடையும் நேரம் இரண்டு வகைப்படும். ஒன்று சிறப்புக்குரிய நேரம், மற்றொன்று நிர்பந்த நேரம். அதாவது நிர்பந்த சூழ்நிலைக்கு உட்படாதவர்கள் சிறப்பிற்குரிய நேரத்திற்குள் இவ்விரு தொழுகையையும் தொழுது கொள்ள வேண்டும். சிறப்பிற்குரிய நேரத்திற்கு முன் தொழ முடியாதவர்கள் நிர்பந்தமான நேரத்திற்குள் தொழுது கொள்ள வெண்டும். அஸர் தொழுகைக்கு சிறப்பிற்குரிய நேரம் ஒரு பொருளின் நிழல் அது போன்று இரண்டு மடங்காகும் வரையாகும். அதற்குரிய நிர்பந்தத்திற்குரிய நேரம் சூரியன் மறையும் வரையுமாகும். இஷாத் தொழுகைக்கு சிறப்பிற்குரிய நேரம் இரவின் மூன்றில் முதல் பகுதி வரையுமாகும். அதற்குரிய நிர்பந்த நேரம் சுப்ஹு வரையுமாகும்.அலைஹி5. ஒவ்வொரு தொழுகையையும் அதற்குரிய நேரங்களுக்குள் தொழுதுவிட வேண்டும். (முற்படுத்தியோ பிற்படுத்தியோ தொழுவது கூடாது) உரிய நேரத்தில் தொழுகையை பேணுவதற்கு வாசகர்களுக்கு நான் கூறும் சில கருத்துக்கள்.1. தொழுகை நேரம் வருவதற்கு சற்று முன்பே தொழுகைக்காக உளு செய்து தயாராகிக் கொள்வதை வழமையாக்கிகொள்ளுங்கள். 2. அதற்கு முடியாதவர்கள் அதான் சொல்லப்பட்டதும் தான் செய்து கொண்டிருந்த அனைத்து காரியங்களையும் நிறுத்தி விட்டு தொழுகைக்காக தயாராகி விடுங்கள்.
3. வெளியில் சென்று கொண்டிருந்தால் அதான் சொல்லப்பட்டதும் பக்கத்திலுள்ள பள்ளியில் தொழுது விடுங்கள்.
4. பெண்கள் அவர்களின் வீட்டிலே முதல் நேரத்திலேயே தொழுவதை வழமையாக்கிக் கொள்ளுங்கள். அதற்கு ஏற்றவாறு உங்களின் வீட்டு வேலைகளை அமைத்துக் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு தொழுகையையும் உரிய நேரத்தில் பாதுகாத்து தொழ நம் அனைவருக்கும் அல்லாஹ் வாய்ப்பளிப்பானாக! ''Jazaakallaahu khairan'' சுவனப்பாதை மாதஇதழ்  

பெண் பாவம் பொல்லாதது!

[ நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்: ‘ஈமான் கொண்ட ஆண்மகன் ஈமான் கொண்ட பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடத்தில் உள்ள ஒரு குணம் அவனுக்கு வெறுப்பளித்தால், அவரிடம் உள்ள மற்றொரு நற்குணத்தைக் கொண்டு அவன் திருப்திப்பட்டு வாழவும்’. (அறிவிப்பாளர்: ஹளரத், அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்தப் பொன்மொழி வாழ்வின் மிகப்பெரும் தத்துவத்தை உணர்துகிறது. உலகில் மனிதனாகப் பிறந்த அனைவரிடமும் ஏதாவது சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதுபோன்றே அனைவரிடமும் ஏதாவது சில சிறப்புகளும் இருக்கும். குறைகளே இல்லாதவர்கள் கிடையாது, அதுபோன்று சிறப்புக்களே இல்லாதவர்களும் கிடையாது.]

கணவர்களுக்குப் பெண்களிடம் இருக்கும் உரிமைகள் போன்று, முறைப்படி அவர்கள்மீது பெண்களுக்கும் உரிமையுண்டு. ஆயினும் ஆண்களுக்கு அவர்கள்மீது ஒருபடி உயர்வுண்டு. மேலும் அல்லாஹ் வல்லமையும்; ஞானமும் மிக்கோனாக இருக்கின்றான். (திருக்குர் ஆன் வசனம் 2: 228)
மஹர் தொகைக்கு மாற்றமாக, வரதட்சணை என்பதை திருமணப்பணமாக நாட்டு நடப்பில் கருதப்படுகிறது. அது ஒரு ஹராமான பணம். அது பாவத்தின் சின்னம். அந்த பணத்தை ஒரு தட்டில் வைத்து, அத்துடன் தேங்காய் மஞ்சளும் வைத்து, ஊர்ப்பெரியவர்கள் எல்லாம் ஒன்றுகூடி பவ்வியயமாக அத்தட்டை கைமாற்றிக் கொள்ளும் காட்சி இருக்கத்தான் செய்கிறது.

‘இஸ்லாம் மட்டும் தற்கொலையை அனுமதித்திருந்தால் ஊர்க்கிணறுகளிலெல்லாம், வரதட்சணை கொடுக்க முடியாத பெண்களின் சடலங்களால் நிரம்பி வழியும்.’ என்கிறார் ஒரு கவிஞர்.

மணவாளன் அனுபவிப்பது வரதட்சணை பணம் மட்டுமா? ஒரு பெண் தாய் வீட்டிலிருந்து கொண்டு வரும் சீர் சாமான்களையும் அவன் பயன்படுத்துகிறான். தான் படுத்துறங்குவது மனைவி கொண்டு வந்த கட்டிலிலே! தான் உட்கார ஒரு சோஃபா செட்டு கூட வாங்கிப்போட வக்கில்லாதவன் மனைவியின் சோஃபாவிலே சுகம் காணுகிறான். பீரோ என்ன? ஃபிரிஜ் என்ன? உழகை;கத் துப்புக்கெட்ட அவன் பயணம் செய்வது கூட மனைவி வீட்டாரின் பணத்திலே!
ஆனால் சட்டம் என்ன சொல்கிறது:
‘தாய் வீட்டிலிருந்து கொண்டு வந்த பொருட்களை கணவன் பயன்படுத்துவதைத் தடைசெய்ய ஒரு பெண்ணுக்கு அதிகாரம் உண்டு.’ (ரத்துல் முக்தார் பாகம் 3 பக்கம் 584)

அதுபோன்றே தனக்குச் சொந்தமான சல்லிக்காசைக் கூட அவள் கணவனுக்குத் தரவேண்டியதில்லை. அவள் அத்தெகையை தனியாக வைத்து சிறு தொழில்கள் மூலம் அந்த முதலீட்டைப் பெருக்கலாம். அவள் அதை தனது பிற்காலப் பாதுகாப்புக்காக சேமித்து வைக்க கடமைப் பட்டிருக்கிறாள்.
சீர் சாமான்களை மட்டுமல்ல, பெண் பெயரில் ஏதாவது வருவாய் இருந்தால் அதையும் ஆண்மகன் உண்டு கொழுக்கிறான். பெண்ணுக்கு வாரிசாகக் கிடைக்கும் சொத்துக்களையும் குடும்பத்துள்ளே போடுகிறான். பெண் ஏமாந்தவளாக இருந்தால், அவள் நகைகளையும் வாங்கி ஏப்பம் விடுகிறான்.
பெண்ணை அனுபவிக்கிறான், பெண் கொண்டுவந்த பொருளையும் அனுபவிக்கிறான். அவள் உதவிக்கரம் நீட்டியதால் உழைப்புக்கும் வழி பெற்றான். இதற்குப் பின்னரும் பெண்ணிடம் ஏதாவது ஒன்று என்றால், ஒரே வார்த்தையை உபயோகித்து மணவிலக்கு செய்து விடுகிறான்.
நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள்: ‘ஈமான் கொண்ட ஆண்மகன் ஈமான் கொண்ட பெண்ணை வெறுக்க வேண்டாம். அவளிடத்தில் உள்ள ஒரு குணம் அவனுக்கு வெறுப்பளித்தால், அவரிடம் உள்ள மற்றொரு நற்குணத்தைக் கொண்டு அவன் திருப்திப்பட்டு வாழவும்’. (அறிவிப்பாளர்: ஹளரத், அபூ ஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு, நூல்: முஸ்லிம்)

பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இந்தப் பொன்மொழி வாழ்வின் மிகப்பெரும் தத்துவத்தை உணர்த்துகிறது. உலகில் மனிதனாகப் பிறந்த அனைவரிடமும் ஏதாவது சில குறைகள் இருக்கத்தான் செய்யும். அதுபோன்றே அனைவரிடமும் ஏதாவது சில சிறப்புகளும் இருக்கும். குறைகளே இல்லாதவர்கள் கிடையாது, அதுபோன்று சிறப்புக்களே இல்லாதவர்களும் கிடையாது. பெண்கள் இந்த நியதிக்கு மாற்றமாவர்கள் அல்ல.
கண் அழகாக இருந்தால் மூக்கு அழகாக இருக்காது. மூக்கு அழகாக இருந்தால், முடி அழகாக இருக்காது. அழகிருந்தால் அடங்கி நடக்க மாட்டாள். இரண்டும் இருந்தால் குழந்தைப்பேறு இருக்காது. அதுவும் இருந்தால் அண்டை அயலாரோடு ஒத்துப் போகின்றவளாக இருக்க மாட்டாள். குறையே அற்ற பெண் வேண்டுமென்றால் சுவனத்துக்குத்தான் செல்லவேண்டும்.
ஒரு தோழர் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வந்து ‘யாரஸூலல்லாஹ்! எனது மனைவியின் நாவு சற்று நீளமாகிறது (அண்டை அயலாரிடம் சண்டை வளர்ப்பவளாக இருக்கிறார்)’ என்று கூறினார். அது கேட்ட நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் அவரை சோதிப்பதற்காக, ‘அப்படியானால் அவளை தலாக் விட்டு விடுங்களேன்!’ என்றார்கள். ‘இல்லை யாரஸூலல்லாஹ்! அவள் நிறைய குழந்தைகளைப் பெற்றுத் தந்திருக்கிறாள். என் மீதும், என் குழந்தைகளின் மீதும் அதிகப்பரிவு காட்டுகிறாள்’ எனக்கூறினார் அந்த தோழர். ‘அப்படியானால் அவளுக்கு உபதேசம் செய்யுங்கள்’ என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் நவின்றார்கள் (அறிவிப்பாளர்: ஹளரத், லகீத் பின் ஸமுரா (ரளி), நூல்: அபூதாவூது)

‘வீட்டுக்கு வீடு வாசல்படி’ என்றொரு பழமொழி வழக்கில் உண்டு. அது போன்றுதான் எல்லாக்குடும்பத்து நிலையும். அதைப் புரிந்து கொள்ளாத சிலர் சில சில்லரைக் காரணங்களுக்காகவெல்லாம் பெண்ணை மணவிலக்கு செய்து விடுகிறார்கள்.
மனைவியின் தயவினால் சம்பாதிக்க ஆரம்பித்த சிலருக்கு நாலுகாசு சேர்ந்தவுடன் வறுமையின் நேரத்தில் கரம் பிடித்த பெண் தற்போது பொறுத்தமானவளாகத் தோன்றவில்லை. தற்போதைய தன் நிலைக்கு பெரிய இடத்துச் சம்பந்தம் கிடைக்கும் எனக் கற்பனை செய்து கொண்டு சிலர் தனது மனைவியைத் தலாக் விட்டு விடுகின்றனர்.
அதுவும் அவளிடமிருந்த பணத்தையெல்லாம் உறிஞ்சி குடித்துவிட்டு அவளை வெறுங்கையுடன் விட்டுவிடுகிறான். ஊர் பஞ்சாயத்துக் கூடி அவனிடமிருந்து எதையாவது மீட்டு பெண்ணிடம் ஒப்படைக்கலாமென முயன்றால், உபயோகித்து உடைந்துபோன சீர் சாமான்களைத்தான் திரும்பப்பெற முடிகிறது. வரதட்சணையாக வைத்துக் கொடுத்த பணம் வராத தட்சணையாக மாறிவிடுகிறது. சட்டப்படியும் அதைத் திரும்பப்பெற உரிமையில்லை, அதனால் தலாக் விடப்பட பெண் தனது ஜீவனாமசத்துக்கும் வழியில்லாமல் ஆதரவின்றி விடப்படுகிறாள். இந்த நிலையைக் காணும் சகோதர சமயத்தவர் இஸ்லாத்தின் சட்ட நியதிகளைக் குறையுடன் நோக்குகிறார்கள்.
இந்த நிலையைப் போக்குவதற்கு ஜமா அத்தார்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒருவன் ஒருலட்சம் ரூபாயை வரதட்சணையாகப் பெற்றால் ஒருலட்சத்து ஆயிரம் ரூபாயை மஹராக ஊர் புத்தகத்தில் பதிவு செய்ய வேண்டும். அவன் பெண்ணை தலாக் விட்டுவிட்டால் அந்த ஒருலட்சத்து ஆயிரத்தையும் சட்டப்படி அவனிடமிருந்து வசூல் செய்து விடலாம். கார், பங்களா, மொபெட் போன்று பொருட்களை வரதட்சணையாகக் கொடுக்கப்பட்டால், அந்தப்பொருட்களின் விலைமதிப்புடன் 1000 ரூபாய் சேர்த்து கடிதப்புத்தகத்தில் மஹராகப் பதிவு செய்ய வேண்டும். இத்தகைய ஏற்பாடு செய்தால் பெண்ணின் கண்ணீரைத் துடைக்க முடியும்.
சோரம்போன பெண்!
தலாக் நிகழ்வதற்கு பெண்கள் சோரம் போய்விடுவது காரணமாக அமையலாம். ஆனால், சில பெண்கள் சோரம் போவதற்கு ஆண்மகனே காரணம் என்பதை மறந்து விடுகிறார்கள்.
பெரும்பாலான பெற்றோர் தனது பெண்மக்களை மிகவும் பாதுகாப்பாகவே வளர்க்கிறார்கள். ஒருவனிடம் கைபிடித்துக் கொடுக்கும்வரை எதுவும் அசம்பாவிதம் நடந்துவிடக்கூடாது என்று கண்காணிப்பாகவே இருக்கிறார்கள். ஜன்னலில் நிற்காதே! ஆடவர்களுடன் பேசாதே! என்று அடிக்கடி எச்சரிக்கை செய்து பாதுகாத்து பத்தினித்தனமாகவே ஒரு ஆண்மகன்கையில் ஒப்படைக்கிறார்கள்.
ஆனால், அவன் மணமுடித்த புதிதில் அவள் மிகவும் நாகரீகம் தெரியாதவளாக இருக்கிறாள் என்று கூறி கடிந்து கொள்கிறான். அவள் நாணப்படுவதை தடுக்கிறான். தனது நண்பர்களிடம் நாகரீகமாக நடந்து கொள்ள வேண்டும் என்று உபதேசிக்கிறான். தன்னுடன் வெளியில் வரும்போது வெளியுலகிற்கு அவள் அழகாகக் காட்சி தரவேண்டுமென வற்புறுத்துகிறான்.
இதனால் அவள் சோரம் போய்விடுகிறாள். அவள் சோரம் போனதற்கு அவன் காரணமாக இருந்தால், அவன் தலாக் விடும் முன் சற்று யோசிக்க வேண்டும். அல்லாஹ் அனைத்தையும் பார்த்துக் கொண்டிருக்கிறான். இறைவனால் அனுமதிக்கப்பட்டவற்றில் இறைவனுக்கு கோபத்தை தரக்கூடியது தலாக் என்பதையெல்லாம் அவன் சிந்தனை செய்ய வேண்டும். ஆம்! பெண்பாவம் பொல்லாதது.
நன்றி: குர்ஆனின் குரல்

Sunday, September 12, 2010

பிறர் துன்பத்தில் இன்பம் காணுதல்!

பிறர் துன்பத்தில் இன்பம் காணுதல்!

அகிலங்களின் இறைவனாகிய அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் உரித்தானது.


பிறரைத் துன்புறுத்தி அவர் படுகின்ற வேதனையைப் பார்த்து ரசிப்பது என்பது இன்றைய காலகட்டத்தில் ஒரு வழக்கமாகவே மாறிவிட்டது என்று கூட கூறலாம். இவ்வாறு பிறர் படும் துன்பங்களை பார்த்து மகிழ்வதற்காக ‘ரகசிய கேமரா நகைச்சுவை நிகழ்சி’ என்று தொலைக் காட்சி சேனல்களில் கூட அதை ஊக்குவிக்கிறார்கள். இன்னும் சிலரோ தமது வக்கிர புத்தியின் காரணமாக சிலரை உண்மையாகவே துன்புறுத்தி அதில் இன்பம் காண்கிறார்கள்.

இவ்வாறு பிறரை துன்புறுத்துவது தமது கைகளாலோ அல்லது செயல்களாலோ அல்லது ஏன் நாவால் கூடவோ இருக்கலாம். பிறரைத் துன்புறுத்தி மகிழும் இத்தகைய இழி செயல்களை இஸ்லாம் வன்மையாக கண்டிக்கிறது. மேலும், இவ்வாறு செய்பவர்களுக்கு மறுமையில் மிக கடுமையான தண்டணைகள் காத்திருக்கின்றது எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்:
முஃமின்களே!
ஒரு சமூகத்தார் பிறியதொரு சமூகத்தாரைப் பரிகாசம் செய்ய வேண்டாம். ஏனெனில் (பரிகசிக்கப்படுவோர்), அவர்களைவிட மேலானவர்களாக இருக்கலாம்;
(அவ்வாறே) எந்தப் பெண்களும், மற்றெந்தப் பெண்களையும் (பரிகாசம் செய்ய வேண்டாம்) – ஏனெனில் இவர்கள் அவர்களை விட மேலானவர்களாக இருக்கலாம்;
இன்னும், உங்களில் ஒருவருக்கொருவர் பழித்துக் கொள்ளாதீர்கள்,
இன்னும் (உங்களில்) ஒருவரையொருவர் (தீய) பட்டப்பெயர்களால் அழைக்காதீர்கள்! ஈமான் கொண்டபின் (அவ்வாறு தீய) பட்டப் பெயர் சூட்டுவது மிகக் கெட்டதாகும்!
எவர்கள் (இவற்றிலிருந்து) மீளவில்லையோ, அத்தகையவர்கள் அநியாயக்காரர்கள் ஆவார்கள். (அல்-குர்ஆன் 49:11)

மேலும் அல்லாஹ் கூறுகிறான்:
“ஈமான் கொண்ட ஆண்களையும், ஈமான் கொண்ட பெண்களையும் செய்யாத (எதையும் செய்ததாகக்) கூறி எவர் நோவினை செய்கிறார்களோ, அவர்கள் நிச்சயமாக அவதூறையும், வெளிப்படையான பாவத்தையுமே சுமந்து கொள்கிறார்கள்” (அல்-குர்ஆன் 33:58)

முஸ்லிமை ஏசுவது பாவமாகும்!

ஒரு முஸ்லிமை ஏசுவது பாவமாகும். அவனுடன் போரிடுவது (அல்லது கொலை செய்வது), இறைமறுப்பு (போன்ற பாவச் செயல்) ஆகும்’ என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் :அப்துல்லாஹ் இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : புகாரி.

திட்டியவரிடமே திரும்பிச் செல்லும் சாபம்!

ஒருவர் மற்றவரை ‘பாவி’ என்றோ, ‘இறைமறுப்பாளன்’ என்றோ அழைத்தால் அவர் (உண்மையில்) அவ்வாறு (பாவியாக, இறைமறுப்பாளனாக) இல்லையாயின் அவர் சொன்ன சொல் சொன்னவரை நோக்கியே திரும்பிவிடுகிறது என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ தர் (ரலி), ஆதாரம் : புகாரி.

முஃமின் திட்டுபவனாக இருக்கமாட்டான்!

‘ஒரு முஃமின் திட்டுபவனாகவோ, சபிப்பவனாகவோ, கெட்ட செயல் புரிபவனாகவோ, கெட்ட வார்த்தை பேசுபவனாகவோ இருக்க மாட்டான்’ என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி), ஆதாரம் : திர்மிதீ.

பிறரை கேவலமாக எண்ணாதிருத்தல்!

தனது சகோதர முஸ்லிம் ஒருவனை கேவலமாக எண்ணுவது அவன் கெட்டவன் என்பதற்கு போதுமான (அடையாளமா)கும் என நபி (ஸல்) கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி), ஆதாரம் : முஸ்லிம்.

நாவைப் பேணுதல்!

‘முஸ்லிம்களில் எவர் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்ட போது ‘எவருடைய நாவினாலும், கரத்தினாலும் (ஏனைய) முஸ்லிம்கள் பாதுகாப்பு பெறுகிறார்களே அவரே!” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), ஆதாரம் : புகாரி.

முஸ்லிம் சகோதரனுக்கு கெடுதல் செய்வர் சாபத்திற்குரியவர் ஆவார்!

‘ஒரு முஸ்லிம் சகோதரனுக்கு கெடுதல் செய்பவனும், அவருக்கு எதிராக சதி செய்பவனும் சாபத்திற்குரியவர்கள்’ அறிவிப்பவர் : அபூபக்கர் (ரலி), ஆதாரம் : திர்மிதி.

சகோதர முஸ்லிமை கேவலமாகக் கருதுவது கெட்ட செயலாகும்!

ஒரு முஸ்லிம் (மற்ற முஸ்லிமுக்கு) சகோதரராகும். அந்த சகோதரரை மோசடி, பொய் மூலம் ஏமாற்றாதீர்கள். அவருடைய மானத்தைக் கெடுத்து பொருளை அபகரித்து கொலை செய்வது தடுக்கப்பட்டதாகும். அவரை கேவலமாகவும் மதிப்பது கெட்ட செயலாகும். ஆதாரம் : திர்மிதி.

உன்னைத் திட்டினால் நீ அவனைத் திட்டாதே!

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: – ‘எவரேனும் சரி உன்னிடமுள்ள குறைகளைச் சொல்லி உன்னைத் திட்டினால் நீ அவனுடைய குறைகளைச் சொல்லி திட்டாதே! காரணம் அந்த பாவம் அவனையே சாரும்’ ஆதாரம் : அபூதாவுத்.

நிந்தித்தவரையே சென்றடையும் நிந்தனை!

நாம் கோபத்தினால் ஒருவரைப் பற்றி பலவாறாக என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் சில நேரங்களில் பேசி விடுகிறோம். ஆனால் அது எவ்வளவு பயங்கரமானது? அதன் பின்விளைவுகள் என்ன என்பதைப் பற்றி சிறிது கூட கவலைப் படுவதில்லை. நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: -

“மற்றவரை ஒருவர் நிந்திக்கும் போது அது வானத்திற்குச் செல்கின்றது. அங்கே வானத்தின் கதவுகள் மூடி இருக்கின்றன. பின்பு அது உலகத்திற்கே திரும்புகிறது. உலகத்திலும் கதவுகள் மூடி இருக்கின்றன். பின்பு அது வலபுறம் இடபுறம் அலைந்து திரிகின்றது. எங்குமே அதற்கு இடமில்லாமல் அது – எவர் நிந்தித்தாரோ அவரிடமே வந்து சேருகிறது”. ஆதாரம் : அபூதாவுத்.

அண்டை வீட்டாருக்கு தொல்லை தராதே!

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்’: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டிருப்பவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். என அபூஹுரைரா(ரலி) அறிவித்தார். (ஆதாரம் : புகாரி)

“அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும்; அல்லது வாய் மூடி இருக்கட்டும் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம்” என்று இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்:அபூஹ¤ரைரா (ரலி) , ஆதாரம் : புகாரி

அண்டை வீட்டாரை துண்புறுத்துபவன் இறை நம்பிக்கையாளரேயல்ல!

‘அல்லாஹ்வீன் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன். அல்லாஹ்வின் மீதாணையாக அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்’ என்று (மூன்று முறை) இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ‘அவன் யார்? இறைத்தூதர் அவர்களே!’ என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் ‘எவனுடைய நாசவேலைகளிலிருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்’ என்று பதிலளித்தார்கள். அறிவிப்பவர் :அபூ ஷுரைஹ் (ரலி), ஆதாரம் : புகாரி.

அண்டை வீட்டாருக்குத் தொல்லை தருபவன் சுவனம் செல்ல முடியாது!

எவருடைய அண்டை வீட்டான் அவருடைய தீங்கை விட்டும் அமைதி பெறவில்லையோ அவர் சுவனம் செல்லமாட்டார் (ஆதாரம் : புகாரி, முஸ்லிம்)

Friday, September 10, 2010

மறப்போம் மன்னிப்போம்

மறப்போம் மன்னிப்போம்


மனிதன் இவ்வுலகத்தில் படைக்கப்பட்ட போதே அவன் தவறு செய்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.

''ஆதமின் மக்கள் அனைவரும் பக­லும் இரவிலும் தவறிழைக்கின்றனர்'' என்பது நபிமொழி. (நூல்: அஹ்மத் 20451)

மனிதன் தவறு செய்பவனாகப் படைக்கப்பட்டுள்ளதால், மனிதர்களிடம் ஏற்படும் தவறுகளை மன்னிக்கும் பண்பு அனைவரிடமும் இருக்க வேண்டும். மேலும் சண்டையிட்டுக் கொள்ளும் சகோதரர்களுக்கு இடையே நல்­லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள்தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள். (அல்குர்ஆன் 49:11)

இந்த வசனம், சண்டையிட்டுக் கொள்பவர்களை சமாதானம்  செய்து வைக்க வேண்டும் என்று கூறுவதோடு, நாம் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என்பதையும் எடுத்துக் கூறுகிறது.


ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கள் கிழமைகளில் (நாம் செய்த) அமல்கள் (அல்லாஹ்விடம்) எடுத்துக் காட்டப்படும். அப்போது அல்லாஹ்விற்கு இணை வைக்காத ஒவ்வொரு மனிதனின் தவறுகளையும் அந்நாளில் அல்லாஹ் மன்னிப்பான். தன் சகோதரனுக்கிடையில் சண்டையிட்டுள்ள ஒருவனைத் தவிர! 'அவர்கள் இருவரும் சமாதானம் செய்து கொள்ளும் வரை அவனை விட்டு விடுங்கள்' என்று கூறப்படும். (நபிமொழி, நூல்: முஸ்­லிம் 4653)

நம் சகோதர, சகோதரர்களிடம் சண்டையிட்டுக் கொள்வதால் நம்முடைய அமல்கள் கூட ஏற்றுக் கொள்ளப்படாது என்றால், சமாதானமும் விட்டுக் கொடுக்கும் பண்பும் எவ்வளவு முக்கியம் என்பதை அறியலாம்.

மனிதர்கள் பல பண்புகளை உடையவர்கள். எனவே பல வகையில் நமக்குத் தொந்தரவுகளைத் தரலாம். அவற்றையெல்லாம் நாம் மன்னித்தால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். எனவே தான் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.

பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக! (அல்குர்ஆன் 7:199)

தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன்; சகிப்புத் தன்மை மிக்கவன். (அல்குர்ஆன் 2:263)

தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்­ணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூ­யை வழங்குவோம். (அல்குர்ஆன் 4:114)
 
இதைப் போன்று கணவன் மனைவியிடம் பிரச்சனை வந்தால் உடனே பிரிந்து விட வேண்டும் என்று அல்லாஹ் கூறவில்லை. இருவரும் பேசி ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும். இதுதான் சிறந்தது என்று படைத்தவன் குறிப்பிடுகிறான்.

தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே நல்ல முறையில் சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது.  (அல்குர்ஆன் 4:128)

இதைப் போன்று போர்க்களங்களில் கூட எதிரிகள் சமாதானத்திற்கு வந்தால் அதையே ஏற்க வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது.

(முஹம்மதே!) அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன்.  (அல்குர்ஆன் 8:61)

அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை.  (அல்குர்ஆன் 4:90)

போர்க்களங்களில் கூட சமாதானத்தை விரும்பும் மார்க்கத்தில் உள்ள நாம், நம் குடும்பத்தில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சனைகளை பெரிதுபடுத்தி, குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவது, சிக்கலை உருவாக்குவது நியாயமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.

நம்மை வெறுப்பவர்களைக் கூட நண்பர்களாக மாற்ற முயற்சிக் வேண்டும். அவர்களுடன் சேர்ந்து வாழ முயல வேண்டும். நபிகளார் கூறுகிறார்கள்:

பதிலுக்கு பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர். மாறாக, உறவு முறிந்தாலும் உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்.  (நூல்: புகாரி 5991)

நம்மிடம் சண்டையிட்டவர்கள் பேசிய வார்த்தைகள், நடந்த முறைகள் எல்லாம் நம் உள்ளத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்தியிருக்கலாம். அதனால் நாம் அவர்களிடம் பகைமை காட்டலாம். அதை நியாயப்படுத்தலாம். ஆனால் நமது  உள்ளத்தை எவ்வளவு பாதித்திருந்தாலும் அவர்களை மன்னிக்க வேண்டும் என்றே அல்லாஹ் கூறுகிறான்.

அபூபக்ர் (ர­லி) அவர்களின் அன்பு மகளும், நபிகளாரின் அன்பு மனைவியுமான அன்னை ஆயிஷா (ர­லி) அவர்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை எதிரிகள் வைத்தனர். அவர்களின் வலையில் சில நபித்தோழர்களும் விழுந்தனர். இந்தக் குற்றச்சாட்டுகள் நபிகளாரையும் அபூபக்ர் (ர­லி) அவர்களையும் அன்னை ஆயிஷா (ர­லி) அவர்களையும் கடுமையாகப் பாதித்தது. (விரிவாக அறிய பார்க்க: புகாரி 4141)
 
இந்நிலையில் அன்னை ஆயிஷா (ர­லி) அவர்கள் தூய்மையானவர்கள் என்று அல்லாஹ் குர்ஆன் வசனத்தை இறக்கி, பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தான். அப்போது இந்த அவதூறு பரப்பியவரும் அபூபக்ர் (ர­லி) அவர்களிடம் உதவி பெற்று வந்தவருமான மிஸ்தஹ் (ர­லி) அவர்களுக்கு இனிமேல் உதவி செய்ய மாட்டேன் என்று அபூபக்ர் (ர­லி) அவர்கள் சத்தியம் செய்தார்கள். இதைக் கண்டித்துப் பின்வருமாறு அல்லாஹ் குர்ஆன் வசனத்தை இறக்கினான்.

''உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். ''அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்'' என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.  (அல்குர்ஆன் 24:22)

மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திய ஒருவருக்கு உதவி செய்ய மாட்டேன் என்று கூறிய போது, தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யும் போது தான் என் மன்னிப்பு உங்களுக்கு உண்டு என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

இதைக் கேட்ட அபூபக்ர் (ர­லி) அவர்கள் ''அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னை அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன்'' என்று கூறி விட்டு மிஸ்தஹ் என்ற நபித்தோழருக்குப் பழையபடி உதவிகளை செய்யத் தொடங்கினார்கள்.

குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளைக் காரணம் காட்டி அவர்களிடமிருந்து பிரிபவர்கள் இந்தச் சம்பவத்தை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தவறு செய்வர்களை மன்னிப்பது அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்றுத் தரும். அல்லாஹ்வின் மன்னிப்பை விட மகத்தான பாக்கியம் எது இருக்க முடியும்?

குடுபம்பங்களில் பிரச்சனைகள் ஏற்படும் போது, அல்லாஹ்வின் மன்னிப்பையும் அவன் காட்டிய வழிமுறைகளையும் நாம் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் நாம் பிரிந்து வாழ விரும்ப மாட்டோம். இன்ஷா அல்லாஹ்!

சத்தியம் செய்யலாமா?

அனைத்து மக்களிடமும் நேர்ச்சை செய்தல் எப்படி வழக்கமாக உள்ளதோ, அது போல் சத்தியம் செய்தலும் உள்ளது. தன்னை, தான் கூறும் வார்த்தைகளில், செய்யும் செயல்கள் உண்மையானவன் தான் எனக் காட்டிட இறைவன் மீது சத்தியமாக! என் தாயின் மீது சத்தியமாக! என் கண் மீது சத்தியமாக! இந்த வேதத்தின் மீது சத்தியமாக! என் குழந்தை மீது சத்தியமாக! என்று பல்வேறு முறைகளில், பலர் சத்தியம் செய்வர். சிலர் குழந்தைகளை தரையில் போட்டு அதை தாண்டி சத்தியம் செய்வர். இது போன்ற சத்தியம் செய்யும் பழக்கத்தில் முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல. குர்ஆன் மீதும், அன்னத்தின் (உணவின்) மீதும், அல்லாஹ் ரசூலுக்கு பொதுவில் என்றும், சத்தியம் செய்தல் இப்படி பலவிதமாக முஸ்லிம்களிடம் உள்ளன. இந்த சத்தியம் செய்யும் விஷயமாக இஸ்லாம் என்ன சொல்கிறது? என்பதை குர்ஆன் ஹதீஸ் ஒளியில் காண்போம்.

சத்தியம் செய்தல் ஆதி காலம் முதல் தொன்று தொட்டு வரும் பழக்கங்களில் உள்ளதாகும். இது மனிதனின் இயற்கை குணாதிசயங்களில் ஒன்றாகவும் உள்ளது. தான் கூறும் வார்த்தைகளை அம்மக்கள் நம்ப மறுக்கிறார்களே என்பதற்காக, இறுதியில் இதன் மீதாவது சத்தியம் செய்து நம்பச் செய்வோம் என்று கருதி, சத்தியம் செய்வதுண்டு, அல்லது சில விஷயத்தை வலுப்படுத்துவதற்காக சத்தியம் செய்வதுண்டு. சில அத்தியாவசிய தேவைகளுக்காக சத்தியம் செய்வதை இஸ்லாம் வலியுறுத்துகிறது.

உதாரணமாக ஒருவன் பொருளை மற்றொருவன் அபகரித்துக் கொண்டான். பொருளைப் பறி கொடுத்தவனிடம் போதிய சான்று இல்லை. சாட்சிகள் இல்லையாயின் பொருளை தன் பொருள் தான் என உறுதிப்படுத்த சத்தியம் செய்யச் சொல்கிறது இஸ்லாம்.

எமன் நாட்டில் உள்ள நிலத்தில் எனக்கும் இன்னொருவருக்கும் வழக்கு இருந்தது. நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்த வழக்கை கொண்டு சென்றேன். உன்னுடையதுதான் என்பதற்கு உன்னிடம் ஆதாரம் உண்டா? எனக் கேட்டார்கள். நான் இல்லை என்றேன் அப்படியானால் உன்னுடைய எதிரி (யின் கைவசத்தில் அந்த நிலம் இருப்பதால்) அது தன்னுடையதே என்று சத்தியம் செய்யக் கோருவதே வழி என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்படியானால் அவர் சத்தியம் செய்யட்டும் என்று நான் கூறினேன்.
அறிவிப்பவர் :- அஷ்அஸ் (ரலி), நூல் :- முஸ்லிம்

இதுபோன்ற மிக அவசியமான சந்தர்ப்பங்களில் சத்தியம் செய்வதை இஸ்லாம் அனுமதித்தாலும், சில ஒழுங்கு முறைகளை இதில் வலியுறுத்துகிறது.

சத்தியம் செய்யும் முறை!
சத்தியம் எந்தப் பொருள் மீது வேண்டுமானாலும் எவர் மீது வேண்டுமானாலும் செய்யலாம் என்ற நிலையை இஸ்லாம் வன்மையாகக் கண்டிக்கிறது. அல்லாஹ் மீது மட்டுமே சத்தியம் செய்யக் கட்டளையிடுகிறது.

ஒருவர் அல்லாஹ் அல்லாத (மற்ற)வை மீது சத்தியம் செய்தால் அவர் காஃபிராகி விட்டார் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு உமர் (ரலி), நூல் :- அபூதாவூத், திர்மிதீ, ஹாகிம்

ஒருவர் சத்தியம் செய்தால், அல்லாஹ் மீது தவிர சத்தியம் செய்ய வேண்டாம் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு உமர் (ரலி) நூல்கள் :- புகாரி, முஸ்லிம்

அல்லாஹ்வைக் கொண்டே தவிர சத்தியம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூஹ{ரைரா (ரலி) நூல்கள் :- அபூதாவூத், நஸயீ, இப்னுஹிப்பான், பைஹகீ

உமர் (ரலி) அவர்கள் தன் தந்தையைக் கொண்டு சத்தியம் செய்வதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், நிச்சயமாக அல்லாஹ் உங்கள் தந்தைகள் மீது சத்தியம் செய்வதைத் தடை செய்து விட்டான். ஒருவர் சத்தியம் செய்தால், அவர் அல்லாஹ்வைக் கொண்டே சத்தியம் செய்யட்டும். அல்லது மவுனமாய் இருக்கட்டும்
என்று கூறினார்கள்.
 அறிவிப்பவர் :- இப்னு உமர் (ரலி) நூல்கள் :- முஸ்லிம், அஹ்மத், நஸயீ

ஒரு யூதப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் வந்து கஃபாவின் மீது சத்தியமாக என்றும், அல்லாஹ்வும் நீங்களும் நாடினால்.... என்று உங்களை நோக்கி உங்கள் தோழர்கள் கூறுகிறார்கள். (இதன் மூலம்) நீங்கள் இணை வைக்கிறீர்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் கஃபாவின் ரப்பின் மீது சத்தியமாக என்று கூறும்படியும் அல்லாஹ்வும் நாடி, அதன் பின் நீங்களும் நாடினால்.. என்று தம்மை நோக்கி கூறும் படியும் அவர்களுக்கு (ஸஹாபாக்களுக்கு) கட்டளையிட்டார்கள்.
அறிவிப்பவர் :- குதைலத் பின்த் ஸைஃபீ (ரலி) நூல்கள் :- அஹ்மத் நஸயீ, இப்னுமாஜா

ஒருவர் தான் சத்தியம் செய்யும் போது, லாத் உஸ்ஸாவை (மக்கா காஃபிர்களின் தெய்வங்களை) கொண்டு சத்தியம் செய்தால் அவர் (ஈமான் இழந்து விட்டார். எனவே) லாயிலாஹ இல்லல்லாஹ்
என்று கூறட்டும்! என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூஹ{ரைரா (ரலி) நூல் :- புகாரி

சிலைகள் மீதும், உங்கள் தந்தைகள் மீதும் சத்தியம் செய்யாதீர்கள் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துர் ரஹ்மான் இப்னு ஸமுரா (ரலி) நூல் :- முஸ்லிம்

மேற்கொண்ட ஹதீஸ்கள் யாவும் இறைவன் பெயர் கொண்டு மட்டுமே சத்தியம் செய்ய அனுமதிக்கிறது. எனவே இன்று முஸ்லிம்கள், அந்த அவ்லியா மீது சத்தியமாக! இன்ன நாதா மீது சத்தியமாக! குழந்தை மீது சத்தியமாக! உணவு மீது சத்தியமாக! என்றெல்லாம் சத்தியம் செய்கின்றனர். அல்லாஹ் அல்லாத எந்தப் பொருளின் மீது சத்தியம் செய்தாலும் அவை கூடாது. அப்படிக்கூறி சத்தியம் செய்வது மாபெரும் குற்றம் என்பதையும் அறியலாம். எனவே அல்லாஹ்வின் பெயர் கூறி மட்டுமே சத்தியம் செய்ய வேண்டும்.

குர்ஆன் மீது சத்தியம் செய்தல்!
குர்ஆன் என்பது இறைவன் இறக்கிய திருமறை தானே அதில் சத்தியம் செய்தால் தவறா? என்ற எண்ணம் தவறாகும். இன்றும் கூட நீதிமன்றங்களில் முஸ்லிம்கள் விசாரிக்கப்படும் போது, அதற்கு முன்பாக குர்ஆன் மீது சத்தியம் செய்யச் சொல்லி கேட்கிறார்கள். இவ்வாறு குர்ஆன் மீது சத்தியம் செய்வது கூடாததாகும். ஆனால் குர்ஆனை இறக்கியருளிய ரப்பின் மீது சத்தியமாக!

என சத்தியம் செய்வது தவறில்லை. இதை மேற்கண்ட குதைலத் பின்த் ஸைஃபீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸ் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்களின் சத்தியம்!
நபி (ஸல்) அவர்கள் எவ்வாறு சத்தியம் செய்துள்ளார்கள் என்பதை பின்வரும் ஹதீஸ்கள் தெளிவு படுத்துகின்றன.

நபி (ஸல்) அவர்கள் இதயங்களை புரட்டுபவன் மீது சத்தியமாக! என்ற வார்த்தையை சத்தியம் செய்யும் போது அதிகம் குறிப்பிடுவார்கள்.
அறிவிப்பவர் :- இப்னு உமர் (ரலி) நூல்கள் :- இப்னுமாஜா, புகாரி, திர்மிதீ, அபூதாவூத் நஸயீ

முஹமமத் (ஸல்) சமுதாயமே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக நீங்கள் (மட்டும்) நான் அறிந்தவற்றை அறிந்தால் அதிகம் அழுவீர்கள். குறைவாக சிரிப்பீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- ஆயிஷா (ரலி) நூல் :- புகாரி

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். உமர் (ரலி) அவர்கள் கையை, அவர்கள் பிடித்திருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இறைத்தூதர் அவர்களே! என்னை நான் விரும்புவது தவிர, மற்ற எல்லா விஷயங்களையும் விட, நீங்கள் எனக்கு மிக விருப்பமானவர்கள்! என்று கூறினார்கள். ~அப்படி அல்ல! என் உயிர் எவன் கையில் இருக்கிறதோ அவன் மீது சத்தியமாக உம்மையும் விட நான் உமக்கு மிக விருப்பம் உள்ளவராக இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதும், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்களே எனக்கு என்னை விட மிக விருப்பமானவர்கள்! என்று உமர் (ரலி) கூறினார்கள். உமரே! இப்போது தான் (நீர் சரியாகக் கூறினீர்) என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லா இப்னுஹிஷாம் (ரலி) நூல் :- புகாரி

நபி (ஸல்) அவர்கள் சத்தியம் செய்துள்ளபடி அல்லாஹ்வின் மீதும் அல்லது அல்லாஹ்வின் தன்மைகள் மீதும் சத்தியம் செய்யலாம் என்பதை அறிய முடிகிறது.

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து இஸ்லாத்தை பற்றி சில கேள்விகள் கேட்டனர். நபி (ஸல்) அவர்கள் அதற்கு விளக்கம் தந்தார்கள். அதன் பின் அந்த கிராமவாசி இதைவிட நான் எதனையும் அதிக மாக்கவும் மாட்டேன் குறைக்கவும் மாட்டேன்
என்று சொன்னார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் இவருடைய தந்தையின் மீது சத்தியமாக! இவர் உண்மை கூறினால் வெற்றியடைந்து விட்டார் என்று குறிப்பிட்டார்கள். (ஹதீஸ் சுருக்கம்)
அறிவிப்பவர் :- தல்ஹா இப்னு உபைதுல்லா (ரலி) நூல் :- முஸ்லிம்

இந்த ஹதீஸ்படி நபி (ஸல்) அவர்கள் ~தந்தை மீது சத்தியம் செய்து உள்ளார்களே? என்ற கேள்வி எழலாம். அல்லாஹ்வை தவிர வேறு எதன் மீது சத்தியம் செய்தல் கூடாது என்று ஹதீஸ்கள் உள்ளதாலும் பின்வரும் ஹதீஸை கவனிக்கும் போது மேற்கூறிய சம்பவம் தடை செய்யப்படுமுன் நடந்தது என்பது தெளிவாகிறது.

ஒரு யஹ{தி நபி (ஸல்) அவர்களிடம் வந்து நீங்களும் அல்லாஹ்வுக்கு இணை வைக்கிறீர்கள் (எவ்வாறெனில்) கஃபாவின் மீது ஆணையாக! என்றெல்லாம் குறிப்பிடுகிறீர்களே? என்று கேட்டார். அதன்பின் நபி (ஸல்) அவர்கள் (கஃபாவின் மீது ஆணையாக! என்று சொல்லாமல்) கஃபாவின் இறைவன் மீது ஆணையாக! என்று கூறும்படி தோழர்களுக்கு கட்டளை யிட்டனர். (ஹதீஸின் சுருக்கம்)
அறிவிப்பவர் :- குதைலா (ரலி) நூல்கள் :- அஹ்மத், நஸயீ, இப்னுமாஜா.

ஆரம்ப காலங்களில் அல்லாஹ் அல்லாதவை மீது சத்தியம் செய்யும் பழக்கம் இருந்து பின்பு அது மாற்றப்பட்டது என்பதற்கு இந்த ஹதீஸ் சான்றாகும்.

அல்லாஹ்வின் சத்தியம்
அல்லாஹ்வின் மீதும் அவனது தன்மைகள் மீதும் தான், மனிதர்கள் சத்தியம் செய்ய வேண்டும். நபி (ஸல்) அவர்களும் அப்படித்தான் சத்தியம் செய்துள்ளனர் என்பதை மேலே குறிப்பிட்டோம். ஆனால் அல்லாஹ்வோ, காலம், குதிரை, அத்தி, ஸைத்தூன், ஸினாய்மலை, மக்கா, முற்பகல், இரவு, சூரியன், சந்திரன், வானம், பூமி, ஆத்மா, நட்சத்திரம், மறுமை நாள் இவைகள் மீது சத்தியம் செய்து 85, 86, 91, 93, 95, 100, 103 ஆகிய அத்தியாயங்கள் மற்றும் பல வசனங்களில் பல்வேறு செய்திகளை கூறுகிறான்.

திருமறை நாள்வழிகாட்டி என்பது அனைத்து முஸ்லிம்களும் ஒப்புக் கொண்ட உண்மையாகும். திருமறையி;ல் அல்லாஹ் செய்து காட்டியபடி நாம் ஏன் அல்லாஹ் அல்லாத மற்றவைகள் மீது சத்தியம் செய்யக்கூடாது
என சிலர் கேட்கின்றனர்.

இதற்குரிய பதிலை அறியும் முன், ஒரு முக்கிய விஷயத்தை விளங்கிக் கொண்டோமானால், பதில் தெளிவாக தெரிந்து விடும். சத்தியம் செய்தல் என்பது நம்மை விட உயர்வான ஒன்றைக் காட்டி அதன் மீது சத்தியமாக என்று கூறுவதாகும். இதன்படி நம்மை விட உயர்ந்த வல்ல அல்லாஹ்வின் மீது தான் நாம் சத்தியம் செய்ய வேண்டும். ஆனால், அல்லாஹ்வை விட வேறு சிறந்த பொருள் இல்லை. எனவே அல்லாஹ்வே சூரியன், சந்திரன் போன்ற தன் படைப்புகள் மீது சத்தியம் செய்கிறான் என்றால் சத்தியம் செய்தபின் கூறப்படும் சட்டத்தின் முக்கியத்துவத்தை உணர்த்தவே, இந்த அபூர்வ படைப்பின் மீது சத்தியம் செய்து கூறுகிறேன். கியாமத் நாள் உண்மை என நம்புங்கள்
என்று குறிப்பிடுகிறான். இருப்பினும் இறைவன் கூறும் பின்வரும் வசனமே இதற்கு பதிலாகவும் அமையும்.

அவன் செய்பவைபற்றி எவரும் அவனைக் கேட்க முடியாது. ஆனால், அவர்கள் தாம் (அவர்கள் செய்யும் செயல்கள் பற்றி) கேட்கப்படுவார்கள். (அல்குர்ஆன்:21:23)

எல்லா வல்லமையும் நிறைந்த அல்லாஹ்வின் செயல் பற்றி அவனது அடிமைகளான நாம் கேள்வி எழுப்ப இயலாது. எனவே, அவனது தூதர் நபி (ஸல்) அவர்கள் இறைவனல்லாத எந்த பொருள் மீதும் சத்தியம் செய்ய அனுமதிக்காததால் நாமும், அல்லாஹ்வின் மீதும் அவனது தன்மைகள் மீதும் மட்டும் சத்தியம் செய்ய வேண்டும்.

சத்தியத்தின் பலவகை
சத்தியம் செய்வது என்பது செய்யத் தகுதியுள்ள செயல் முறைதான், என்றாலும் கூட எதற்கெடுத்தாலும் சத்தியம், எதைப் பேசினாலும் சத்தியம் என்ற நிலை இருக்கக்கூடாது. இவ்வாறு அடிக்கடி சத்தியம் செய்யும் பழக்கம் பொய்யனிடம் மட்டும் இருக்கும் என்பது மறுக்க முடியாத உண்மையாகும். இதுபற்றி அல்லாஹ்வும் கூறுகிறான்.

மேலும் இழிவு உள்ளவனான, அதிகம் சத்தியம் செய்யும் ஒவ்வொருவனுக்கும், வழிபடாதீர். (அத்தகையவன்) குறை கூறித்திரிபவன் - கோள் சொல்லிக் கொண்டு நடப்பவன். (அல்குர்ஆன்: 68:10,11)

எனவே, எந்த செயல் செய்தாலும், எந்தப் பேச்சு பேசினாலும் சத்தியம் செய்தல் என்பது கூடாது.

சத்தியத்தின் வகைகளை பற்றி தெரிந்து கொண்டு விட்டால் சத்தியத்தை அடிக்கடி பயன்படுத்தும் செயல் குறைய வாய்ப்புண்டு. வீண் சத்தியம், பொய் சத்தியம், முறையான சத்தியம் என்று மூன்று நிலைகளாக சத்தியத்தை பிரிக்கலாம்.

1. வீண் சத்தியம்
அடிக்கடி சிலர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் இதைத் தருகிறேன், செய்கிறேன் என்று வார்த்தைக்கு வார்த்தை சத்தியம் செய்ய வேண்டும் என்ற எண்ணமின்றி@ அல்லது கோப நிலையில் சத்தியத்திற்கு பயன்படும் வார்த்தைகளை கூறுவர்.

சத்தியம் என்பது இதைச் செய்தால் ஒழிய நம்ப மாட்டார்கள் என்ற நிலையில் மட்டுமே செய்யப்பட வேண்டிய ஒன்றாகும். எனவே சத்தியம் செய்வதற்கு நிய்யத்
அவசியமாகும்.

நிச்சயமாக! செயல்கள் அனைத்தும் எண்ணங்கள் கொண்டே (கவனிக்கப்படும்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- உமர் (ரலி) நூல் :- புகாரி

எனவே சத்தியம் செய்யும் எண்ணம் (நிய்யத்) இன்றி செய்யப்படும் சத்தியம் அனைத்தும் வீண் சத்தியங்களாகும். இவைகள் சத்தியம் என்ற கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட மாட்டாது.

(யோசனையின்றி எண்ணமின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களை குற்றம் பிடிக்கமாட்டான். (அல்குர்ஆன்: 2:22,5:89)

2. பொய் சத்தியம்
தவறான செயல்களை செய்து, அதை உறுதிப்படுத்த சத்தியத்தை பயன்படுத்துவதும், பொய்யான ஒரு செய்தியைக் கூறி அது உண்மையானதுதான் என கூற சத்தியத்தை பயன்படுத்துவதும், பிறர் பொருளை அபகரிக்க, ஒருவன் மீது அவதூறு கூற, பொய்க்குற்றச் சாட்டுசுமத்த, இப்படி தவறான காரியங்களை நிறைவேற்ற சத்தியத்தை பயன்படுத்துவதும் கூடாது. இது போன்ற நிலைகளில் பயன்படுத்தப்படும் சத்தியமே பொய் சத்தியம்
எனக்கூறப்படும். அல்லாஹ்வினாலும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களாலும் கடுமையாக கண்டிக்கப்பட்ட செயல்பாடுகளில் இதுவும் ஒன்றாகும்.

“ஒரு சமூகத்தார் மற்றொரு சமூகத்தாரை விட அதிகமானவர்களாக இருக்கிறார்கள் என்றால், நீங்கள் உங்கள் சத்தியங்களை உங்களுக்கிடையில் ஏமாற்றுவதற்கு சாதங்களாக்கிக் கொள்ளாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்களை சோதிப்பது எல்லாம் இதன் மூலமாகத்தான்...” (அல்குர்ஆன்:16:92)

நீங்கள் உங்களுக்கிடயில் (சதி, துரோகம்) ஆகியவற்றுக்கு காரணமாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (அவ்வாறு செய்தால்) நிறைபெற்ற உங்களுடைய பாதம் சறுகி விடும். (அல்குர்ஆன்:16:94)

யார் அல்லாஹ்விடத்தில் செய்த வாக்குறுதியையும், தம் சத்தியப்பிரமாணங்களையும் அற்ப விலைக்கு விற்கிறார்களோ, அவர்களுக்கு நிச்சயமாக மறுமையில் (யாதொரு) நற்பாக்கியமும் இல்லை. அன்றியும், அல்லாஹ் அவர்களுடன் பேசமாட்டான். இன்னும் மறுமையில் அவர்கள் (கருணையுடன் பார்க்கவும் மாட்டான், அவர்களை (பாவத்தை விட்டும் பரிசுத்தமாக்கவும் மாட்டான், மேலும் அவர்களுக்கு நோவினை மிக்க வேதனையும் உண்டு.
(அல்குர்ஆன்:3:77)

(பொய்) சத்தியம் செய்து ஒரு முஸ்லிமுடைய உரிமையை யார் பறிக்கிறானோ, அவனுக்கு அல்லாஹ் நரகத்தை விதியாக்கி விடுவான். மேலும் சுவர்க்கத்தை அவனுக்கு ஹராமாக்கி விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூஉமாமா (ரலி) நூல்கள் :- முஸ்லிம், அல்முஅத்தா (மாலிக்)

ஒரு முஸ்லிமுடைய பொருளைப் பறித்துக் கொள்வதற்காக யார் பொய்யான சத்தியம் செய்கிறாரோ, அவர் மீது அல்லாஹ் கோபமடைந்த நிலையில் தான் அவர் அல்லாஹ்வை சந்திப்பார் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊது (ரலி) நூல் :- முஸ்லிம்

அல்லாஹ்விற்கு இணை வைத்தல், பெற்றோரை நோவினை செய்தல், (அநீதமாக) கொலை செய்தல், பொய் சத்தியம் செய்தல் ஆகியவை பெரும் பாவங்களாகும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துல்லா இப்னு உமர் (ரலி) நூல் :- புகாரி

3. முறையான சத்தியம்
அடுத்து, முறையான சத்தியத்தை நாம் விளக்கவே தேவை இல்லை. முறையான சத்தியம் செய்ய தடை இல்லை என்பதற்கு போதிய சான்றுகளாக நாம் மேலே குறிப்பிட்ட வசனங்கள், ஹதீஸ்களே அமைந்துள்ளன. எனவே, ஒருவர் பொய் சத்தியம் செய்யக்கூடாது. எதற்கெடுத்தாலும் சத்திய வார்த்தைகளை கூறவும் கூடாது. பயன்படுத்தினால் அவை வீண் சத்தியங்களாகத் தான் கருதப்படும்

சத்தியத்தை முறிக்கலாமா?
அவசியமான சந்தர்ப்பங்களில் சத்தியம் செய்யும் நிலை ஏற்பட்டால் சத்தியத்தில் உறுதியாக இருக்க வேண்டும். சத்தியத்தை இடையில் முறிந்திட தடை வந்துள்ளது.

இன்னும் நீங்கள் அல்லாஹ்வின் பெயரால் செய்யும் உடன்படிக்கையை நிறைவேற்றுங்கள். அல்லாஹ்வை சாட்சியாக வைத்து சத்தியம் செய்து, அதனை உறுதிப்படுத்திய பின்னர் அச்சத்தியத்தை முறிக்காதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் நீங்கள் செய்வதை நன்கறிவான். நீங்கள் (சத்தியத்தை முறிக்கும் விசயத்தில் நூலை நூற்று நன்கு முறுக்கேறிய பின் அதை துண்டு துண்டாக்கிவிடும் (மதிகெட்ட) பெண்ணுக்கு ஒப்பாகி விடாதீர்கள்.
(அல்குர்ஆன்:16:91,92)

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தங்கள் மனைவியரை ஒரு மாதத்திற்கு நெருங்க மாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டு பின்பு 29வது நாளிலேயே மனைவியாரிடம் செல்கிறார்கள். அருகிலிருந்தோர், இறைத்தூதர் அவர்களே! ஒரு மாதம் முடியவில்லையே! என்று கூற இம்மாதம் 29 நாள் மட்டும் தான் என்று நபி (ஸல்) கூறினார்கள் என்ற கருத்தில் அனஸ், உம்முசலமா, இப்னு அப்பாஸ் (ரலியல்லாஹ{ அன்ஹ{ம்) அவர்களால் அறிவிக்கப்பட்டு புகாரி, முஸ்லிம், அஹ்மதில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஹதீஸ்படி சத்தியத்தை நிறை வேற்றுவதில் நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களின் தோழர்களுக்கும் இருந்த ஆர்வத்தை நம்மால் விளங்க முடிகிறது.

இருப்பினும் சில வேளைகளில் சத்தியத்தை முறித்திட இஸ்லாம் அனுமதிக்கிறது. அதாவது ஒருவன், ~நான் இதைத் தவிர வேறு எதையும் வாங்க மாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து கூறி விடுகிறான். அதன் பனி அதை விட சிறந்த ஒரு பொருள் அவன் வசம் கிடைக்கிறது. என்றால், தான் செய்த சத்தியத்தை முறித்து விட்டு, அதற்கான பரிகாரம் செய்துவிட்டு, சிறந்த பொருளை வாங்கிக் கொள்ளலாம். அனைத்து விஷயங்களுக்கும் சத்தியத்தை முறிப்பதில் நாம் கூறிய இந்த உதாரணம் பொருந்தும்.

இன்னும் நீங்கள் அல்லாஹ்வைக் கொண்டு சத்தியம் செய்வதனால் நீங்கள் நற்கருமங்கள் செய்தல் இறைபக்தியுடன் நடத்தல், மனிதர்களிடையே சமாதானம் செய்து வைத்தல் போன்றவற்றில் அவனை ஒரு தடையாக செய்து விடாதீர்கள். அல்லாஹ் (அனைத்தையும்) கேட்பவனாகவும், அறிபவனாகவும் இருக்கிறான்.(அல்குர்ஆன்:2:224)

அல்லாஹ் உங்களுடைய சத்தியங்களை (சிலபோது தக்க பரிகாரங்களுடன்) முறித்து விடுவதை உங்களுக்கு ஏற்படுத்தியிருக்கிறான். மேலும், அல்லாஹ் உங்கள் எஜமானன், மேலும் அவன் நன்கறிந்தவன், ஞானம் மிக்கவன். (அல்குர்ஆன்:66:2)

நீ (ஒரு விஷயத்தில்) சத்தியம் செய்து அதைவிட சிறந்ததாக மற்றொன்றை நீ அறிந்தால், அந்த சிறந்ததை செய், உன் (முறித்த) சத்தியத்திற்கு பரிகாரம் செய்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அப்துர்ரஹ்மான் இப்னு ஸமுரா (ரலி) நூல் :- புகாரி, முஸ்லிம், நஸயீ, அபுதாவூத்

உங்களில் ஒருவர் சத்தியம் செய்து, அதைவிட சிறந்ததாக மற்றொன்றை கண்டால் அவர் சத்தியத்திற்கு பரிகாரம் செய்து விட்டு, அந்த சிறந்த செயலை செய்யட்டும் என்று நபி (ஸல்) கூறினார்கள்.
அறிவிப்பவர் :-அதீ இப்னு ஹாதிம் (ரலி), அபூஹ{ரைரா (ரலி) நூல் :- முஸ்லிம், அஹ்மத், திர்மிதீ

எனவே, சத்தியம் செய்தால் அதில் உறுதியாக இருக்க வேண்டும். சில நேரங்களில் அவசியம் என்ற நிலை இருப்பின் முறித்துவிடுவதில் தவறில்லை.

சத்தியத்தை முறித்தால்....!
ஒருவர் தான் செய்த சத்தியத்தை முறித்திட வேண்டியது ஏற்பட்டால், அவர் தான் செய்த சத்தியத்திற்கு பரிகாரமாக, பத்து ஏழைகளுக்கு உணவளித்தல் வேண்டும். அல்லது அவர்களுக்கு ஆடைதர வேண்டும். அல்லது ஒரு அடிமையை விடுதலை செய்ய வேண்டும். இம்மூன்றுக்கும் இயலாது எனில்@ மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும்.

சத்தியத்தின் பரிகாரமாவது, நீங்கள் உங்கள் குடும்பத்தினருக்கு கொடுத்து வரும் ஆகாரத்தில் நடுத்தரமானதை - பத்து ஏழைகளுக்கு அளிக்க வேண்டும். அல்லது (அவ்வாறே) அவர்களுக்கு ஆடையளிக்க வேண்டும். அல்லது ஓர் அடிமையை விடுதலை செய்ய வேண்டும். (இதற்கான வசதியை ஒருவன் பெற்றிருக்காவிட்டால், மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும். நீங்கள் சத்தியம் செய்யும் பொழுது@ இதுவே உங்கள் சத்தியங்களின் பரிகாரமாகும். உங்கள் சத்தியங்களை (முறித்து விடாமல்) பேணிக்காத்துக் கொள்ளுங்கள். நீங்கள் அல்லாஹ்வுக்கு நன்றி செலுத்தும் பொருட்டு அவன் தன் அத்தாட்சிகளை - ஆயத்களை உங்களுக்கு இவ்வாறு விளக்குகின்றான். (அல்குர்ஆன்:5:89)

சத்தியம் செய்யும் எண்ணத்துடன், அத்தியாவசிய சந்தர்ப்பங்களில் செய்யப்படும் முறையான சத்தியங்களை முறித்தால் தான் பரிகாரம் காண வேண்டும். அது அல்லாத மற்ற வீணான சத்தியங்களை செய்தால் பரிகாரம் தேவை இல்லை. இருப்பினும் பொய் சத்தியம் செய்தால் இறைவனிடம் தவ்பா செய்வதைத் தவிர வேறு வழி இல்லை. காரணம் அது மிகப் பெரும் பாவமாகும்.

(யோசனையின்றி) நீங்கள் செய்யும் வீணான சத்தியங்களுக்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்க மாட்டான். ஆனால், உங்களுடைய இதயங்கள் (வேண்டுமென்றே) சம்பாதித்துக் கொண்டதைப் பற்றி உங்களைக் குற்றம் பிடிப்பான். இன்னும் அல்லாஹ் மன்னிப்பவனாக பொறுமையுடையவனாக இருக்கிறான். (அல்குர்ஆன்:2:25)

சத்தியங்களில் வீணானவற்றிற்காக அல்லாஹ் உங்களைக் குற்றம் பிடிக்கமாட்டான். எனினும் (ஏதாவது ஒன்றை) உறுதிப்படுத்தச் செய்யும் சத்தியங்களுக்காக (அவற்றில் தவறினால்) உங்களைப் பிடிப்பான்.(அல்குர்ஆன்:5:99)

பொய் சத்தியம் செய்தல் பெரும் பாவமாகும் என்று நபி (ஸல்) கூறியதாக இப்னு உமர் (ரலி) கூறுகிறார்கள்.
(புகாரியில் உள்ளதின் சுருக்கம்)

இன்ஷா அல்லாஹ் கூறினால்....!
சத்தியம் செய்யும் போது ஒருவர், அல்லாஹ்வின் மீது சத்தியமாக! இன்ஷா அல்லாஹ் இதைச் செய்வேன் என்று இன்ஷா அல்லாஹ் (அல்லாஹ் நாடினால்) என்ற வார்த்தையை சேர்த்துக் கூறினால் அவர், தான் செய்த சத்தியத்திற்கு மாற்றமாக நடந்து கொண்டாலும் தவறில்லை. அவர் சத்தியம் செய்தாலும் கூட இன்ஷா அல்லாஹ் கூறியதால், அல்லாஹ் நாடவில்லை@ அதனால் தான் அதைச் செய்யவில்லை
என்று கூறிவிட வாய்ப்புண்டு.

நிச்சயமாக என் மனைவியிடம், ஒரே இரவில் (உடலுறவுக்காக) சுற்றி வருவேன். அவர்கள் ஒவ்வொருவரும் இறைவழியில் பாடுபடும் குழந்தையை பெற்றெடுப்பர் என்று அல்லாஹ்வின் நபி சுலைமான் (அலை) அவர்கள் கூறினார்கள். (அருகிலிருந்த) அவரது தோழர் அல்லது மலக்கு, இன்ஷா அல்லாஹ் என்றும் கூறுங்கள் என்று கூறினார். ஆனால் சொல்ல மறந்துவிட்டார்கள். இருப்பினும்@ அந்த பெண்களில் ஒருவரைத் தவிர மற்ற எவரும் குழந்தை பெறவில்லை. (அந்த ஒரு பெண்ணும்) ஊனமுற்ற குழந்தையைப் பெற்றார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, சுலைமான் (அலை) அவர்கள் மட்டும் இன்ஷா அல்லாஹ் கூறி இருந்தால் சத்தியத்தை முறித்தவராக ஆகமாட்டார்கள். அவருக்கு அவரது தேவையில் ஒரு வழி இருந்திருக்கும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் :- அபூஹ{ரைரா (ரலி) நூல் :- முஸ்லிம்

-------->ஆசிரியர் : கே. எம். முகம்மது முகைதீன் - கணனியாக்கம் : S. B. பாத்திமா ருக்ஷானா

நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்


 அஸ்ஸலாமுஅலைக்கும்

"என் இனிய நோன்பு பெருநாள் நல் வாழ்த்துகள்".
இந்த ரமழான் மாதத்தில் நாம் செய்த அனைத்து நல்ல அமல்களையும் அல்லாஹ் ஏற்று பரிபூரண நன்மைகள் கிடைத்தவர்களில் ஒருவர்களாக நம்மையும் நமது குடும்பத்தார்களையும் ஆக்கி அருள் புரிவானாக

Friday, May 28, 2010

மனம் விட்டுப் பேசுங்கள்



உறவுகளானாலும் சரி, நட்புகளானாலும் சரி மனம் விட்டுப் பேச முடிந்த அளவு மட்டுமே ஆழப்படுகின்றன. பலம் பெறுகின்றன.


மனம் விட்டுப் பேசுவது நின்று போகுமானால் அனுமானங்களும்,சந்தேகங்களும் நிஜங்களின் இடத்தைப் பெற்றுக் கொண்டு எல்லாவற்றையும் நிர்ணயம் செய்ய ஆரம்பித்து விடுகின்றன.

பின் அந்த உறவுகளில் விரிசல் விழுகின்றன; நட்புகள் துண்டிக்கப்படுகின்றன. என்றோ படித்த ஒரு வியட்நாமியக் கதை நினைவுக்கு வருகிறது.

ஒரு இராணுவ வீரனும், ஒரு இளம் பெண்ணும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள்.மூன்றே மாதத்தில் போர் ஏற்பட இராணுவ வீரன் போருக்குப் போக வேண்டியதாகி விடுகின்றது.அவன் போகும் போது மனைவி கர்ப்பிணி. இருவருமே மிகுந்த மன வருத்தத்தில் பிரிகிறார்கள்.

போர் முடிந்து உயிரோடு திரும்புவது நிச்சயமில்லையல்லவா?ஆனால் அதிர்ஷ்டவசமாக போருக்குப் போன வீரன் மூன்றாண்டுகள் கழிந்து வெற்றிகரமாக திரும்புகிறான்.. விமானதளத்தில் அவன் மனைவியும், மகனும் அவனுக்காகக் காத்திருக்கிறார்கள். மனைவியையும் மகனையும் ஆனந்தமாகக் கட்டியணைத்துக் கொள்கிறான் அந்த வீரன். அவன் கண்ணிலும், மனைவி கண்ணிலும் ஆனந்தக் கண்ணீர்.

வீடு திரும்புகிறார்கள். கணவனுக்குப் பிடித்த சமையல் செய்ய சாமான்கள் வாங்கி வர மனைவி மார்க்கெட்டுக்குச் செல்ல வீட்டில் மகனும், தந்தையும் மட்டுமே இருக்கிறார்கள்.

கூச்சத்துடன் ஒதுங்கி நின்ற மகனைப் பார்த்து வீரன் கேட்கிறான். "அப்பாவுடன் ஏன் பேச மாட்டேன்கிறாய்?"

அந்தச் சிறுவன் குழப்பத்துடன் தந்தையைப் பார்த்து விட்டு சொல்கிறான். "நீங்கள் ஒன்றும் என் அப்பா இல்லை"

வீரன் மகனைக் கேட்கிறான். "பின் யார் அப்பா?"

"தினமும் என் அம்மா நிற்கும் போது நிற்பார். அம்மா உட்காரும் போது அவரும் உட்கார்வார்.படுக்கும் போது அவரும் கூடப் படுத்துக் கொள்வார். அவர் தான் என் அப்பா என்று அம்மா சொல்லியிருக்கிறாள்"

வீரனுக்குக் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றியது போல இருந்தது.

மனைவி சாமான்கள் வாங்கிக் கொண்டு வந்த பின் கணவனிடம் திடீர் மாற்றத்தைக் கண்டாள். அவன் அவள் சமைத்ததை உண்ணவில்லை. அவளை அவன் தொடவில்லை. அவள் அவன் அருகில் வருவதைக் கூட அவன் மறுத்தான். இரண்டு நாட்கள் இப்படியே நிகழ மனைவி மனமுடைந்து தற்கொலை செய்து கொள்கிறாள்.

மனைவி இறந்த அன்று இரவு தந்தையும் மகனும் படுத்துக் கொள்ளச் செல்லும் போது தந்தையின் நிழலைக் காண்பித்து மகன் சொல்கிறான். "இதோ என் அப்பா"

திகைத்த வீரன் மகனை விசாரிக்கும் போது உண்மை வெளிவந்தது. தாயின் நிழலைப் பார்த்த மகன் ஒரு நாள் இது யார் என்று வெகுளித் தனமாய் கேட்ட போது, மகன் தந்தை அருகில் இல்லாத குறையை உணரக் கூடாது என்று அவள் இது தான் உன் தந்தை என்று சொல்ல சிறுவன் அன்றிலிருந்து அந்த நிழலையே தந்தையாக நினைத்து வந்திருக்கிறான்.

வீரன் தாங்க முடியாத குற்றவுணர்ச்சியாலும், துக்கத்தாலும் மனமுடைந்து போகிறான்.

இந்தக் கதையில் மகன் சொன்னதைக் கேட்ட வீரன் தன் மனைவியிடம் விளக்கம் கேட்டிருக்கலாம்..மனைவியும் கணவனின் நடவடிக்கைக்கு விளக்கம் கேட்டிருக்கலாம். இருவரும் வெளிப்படையாக மனம் விட்டுப் பேசியிருந்தால் அவர்கள் வாழ்க்கை ஆனந்தமாகச் சென்றிருக்கும். ஆனால் கணவன் தன் மனைவியின் நடத்தை மோசமாக இருந்திருக்கிறது என்று தானாக முடிவெடுத்து அப்படி வெறுப்புடன் நடந்து கொண்டான்.

மனைவியாவது ஏன் இப்படி நடந்து கொள்கிறீர்கள் என்று அவனைப் பதில் சொல்ல வற்புறுத்தியிருக்கலாம். அப்படிச் செய்யாமல் தானாக வாழ்க்கையை முடித்துக் கொண்டாள். ஒரு குடும்பமே தகர்ந்து போனது வாய் விட்டுக் கேளாமல், மனம் விட்டுப் பேசாமல் இருந்ததனால் அல்லவா?

எதையும் தவறாகப் புரிந்து கொள்ளுவதும், தவறாக ஆக்கி விடுவதும் சுலபம். சந்தேகக் கண்ணாடியை வைத்துப் பார்க்கும் போது எதற்கும் எத்தனை தப்பர்த்தங்களும் நம்மால் காண முடியும். இந்த முட்டாள்தனத்தில் பலியாவது உறவுகளும், நட்புகளும், சந்தோஷங்களும் தான்.

புரியாத போது வாய் விட்டுக் கேளுங்கள். முரண்பாடாக நடந்து கொள்வதாகத் தோன்றும் போது ஏன் என்று வெளிப்படையாகக் கேளுங்கள். நீங்களாக அனுமானிக்காதீர்கள். அதே போல் நீங்களும் வழக்கத்திற்கு மாறாக நடந்து கொள்வீர்களேயானால் ஏன் என்பதை தெளிவுபடுத்துங்கள். அவர்களுக்குப் புரியும் என்று நீங்களாக நினைத்துக் கொள்ளாதீர்கள்.

தவறு என்று நினைப்பதை உங்கள் குடும்பத்தினரிடமும் சரி, நண்பர்களிடமும் சரி கண்டிப்பாகத் தெரிவியுங்கள். அதைக் கேட்டு அவர்கள் சொல்லும் காரணங்கள் நியாயமானவையாகக் கூட இருக்கலாம். அப்படியில்லையென்றாலும் நீங்கள் சொன்ன பிறகு தவறு என்பதைப் புரிந்து அவர்கள் திருத்திக் கொள்ளவோ, மீண்டும் அப்படிச் செய்யாமலிருக்கவோ வாய்ப்புகள் உள்ளன அல்லவா?

இப்படி அவ்வப்போதே சரி செய்து கொள்ள வாய்ப்புகள் ஏற்படுத்திக் கொள்வது மனம் விட்டுப் பேசுவதாலேயே சாத்தியமாகிறது. அப்படிச் செய்யாமல் போகும் போது லேசாக எழும் விரிசல் அதே போன்ற தொடர் செய்கைகளால் பெரிதாகிக் கொண்டே வந்து பிரிவினையையே ஏற்படுத்தி விடுகிறது.

எனவே நீண்டநாள் ஆழமான நட்பும், உறவும் நீடிக்க வேண்டுமானால் - வாய் விட்டுப் கேளுங்கள்.மனம் விட்டுப் பேசுங்கள்.